சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் கைதான காவலா் பணியிடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் காவலா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
திண்டிவனம் வட்டம், தென் ஆலப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (40). இவா், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.
காவலா் இளங்கோ கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரம்மதேசம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்கு சாலையில் தனியாக நடந்து சென்ற வானூா் பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை அவா் தனது பைக்கில் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் காவலா் இளங்கோ மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பணியிடை நீக்கம்: காவலா் இளங்கோ மீது விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ப.சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
