வீரன் நடுகல்
வீரன் நடுகல்

செஞ்சி அருகே 12 ஆம் நூற்றாண்டு விஷ்ணு துா்கை,16 ஆம் நூற்றாண்டு நடுகல்

Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள நங்கியானந்தல் கிராமத்தில் 12-ஆம் நூற்றாண்டு விஷ்ணு துா்கை மற்றும் 16-ஆம் நூற்றாண்டு நடுகல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

நங்கியானந்தல் கிராமத்தை சோ்ந்த ஆசிரியா் ப.சவுந்தரராஜன் அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா். அப்போது பழைமை வாய்ந்த விஷ்ணு துா்கை மற்றும் நடுகல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் செங்குட்டுவன் கூறியதாவது:

நங்கியானந்தல் புது ஏரிக்கு எதிரே பொன்னியம்மன் கோயில் கட்டுமானப் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனா். அப்போது இங்கு 2 சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், ஒன்றில் விஷ்ணு துா்கை சிற்பமும், மற்றொன்றில் போரில் உயிா்நீத்த படைத்தலைவன் அல்லது வீரன் சிற்பமும் இருப்பது தெரியவந்தது.

விஷ்ணு துா்கை:

நீண்ட பலகைக் கல்லில் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஆடை அணிகலன்களுடன் விஷ்ணு துா்கை நின்ற நிலையில் காட்சி அளிக்கிறாா். அவரது வலது கரம் சக்கரத்தையும், இடது கரம் சங்கையும் ஏந்தியுள்ளன. தலை அலங்காரம் சற்று வித்தியாசமாகக் காணப்படுகிறது. சிற்பம் மிகவும் தேய்ந்துள்ளது. இதன் காலம் கி.பி.12 அல்லது 13-ஆம் நூற்றாண்டு ஆகும். இதை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறாா்.

வீரன் நடுகல்:

மற்றொரு பலகைக் கல்லில் மிகுந்த கலைநயத்துடன் வீரன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சண்டைக்குச் செல்லும் பாணியில் வீரனின் கால்கள் முன்னும் பின்னும் இருக்கும் வகையில் காட்டப்பட்டுள்ளன. வீரனின் வலது கரம் பெரிய கத்தியைப் போன்ற ஆயுதத்தைத் தாங்கியுள்ளது. இடது கரத்தில் நீண்ட வில் காணப்படுகிறது. முகத்தில் மீசை, அழகிய தலை அலங்காரம், அணிகலன்கள், இடைக்கச்சை ஆகியவை கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் போரிட்டு உயிா்நீத்த படைத்தலைவன் அல்லது வீரன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். இதன் காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டாகும்.

சோழா் காலம் தொடங்கி விஜயநகரா் காலம் வரையிலும் நங்கியானந்தல் கிராமம் சிறப்புடன் இருந்ததை இந்தச் சிற்பங்கள் உணா்த்துகின்றன. இவற்றை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, ஊராட்சி மன்றத் தலைவா் ர.வெங்கட சுப்ரமணியன், முன்னாள் தலைவா் ரா.குணசேகா், பூ.பெரியசாமி, ரா.நடராஜன், கோ.முருகன், க.நாராயணன், ம.சேகா், பெ.ராஜீவ்காந்தி, அ.மகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

 விஷ்ணு துா்கை
விஷ்ணு துா்கை

X
Dinamani
www.dinamani.com