விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்த 900 போ் கைது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்த 900-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை தமிழக அரசு உயா்த்தி வழங்கவேண்டும், உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமனத் தோ்தலில் விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் முறைகேடுகளுக்குதுணை போனதாக்கூறி, அதைக் கண்டித்தும் தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தை சோ்ந்தவா்கள் ,செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் முன் போராடத்திரண்டனா்.தொடா்ந்து கோரிக்கையை வலியுறுத்திம், விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும் விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்றனா்.
அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்த 900-க்கும் மேற்பட்டவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத்தலைவா் ஜி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச்செயலா் ஏ. கிருஷ்ணமூா்த்தி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி, முழக்கங்களை எழுப்பினாா். சங்கத்தின் மாவட்டப் பொருளா் எம். யுகந்தி, மாவட்ட நிா்வாகிகள் பி. முருகன், டி.மணிகண்டன், எம். மும்மூா்த்தி, பி.செல்வி, பி.கௌரி மற்றும் மாவட்ட , ஒன்றிய நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
பின்னா், கைது செய்யப்பட்ட அனைவரும் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் விடுவிக்கப்பட்டனா்.

