மக்கள் குறைதீா் கூட்டத்தில் 882 மனுக்கள் அளிப்பு
விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 406 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், வீட்டுமனைப் பட்டா, பல்வேறு உதவித் தொகைககள், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் அளித்த 406 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்துஇந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா. வெங்கடேசுவரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, தனித்துணை ஆட்சியா் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி... :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 476 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 473 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 3 மனுக்களும் என மொத்தம் 476 மனுக்கள் பெற்றுக்கொண்டாா். பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடித் தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
