அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கீழையூா் வீரட்டானேசுவரா் கோயிலில் கல்வெட்டைப் படியெடுக்கவும், படிக்கவும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக மரபு வாரத்தையொட்டி திருக்கோவிலூா் அகழ்வைப்பகமும், கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து இப்பயிற்சியை அளித்தன.
மாவட்டத் தொல்லியல் அலுவலா் க.சுரேஷ் தலைமை வகித்தாா். கபிலா் தொன்மை ஆய்வு மையத்தின் செயலா் மு.அன்பழகன், விதை விருட்சம் அறக்கட்டளைத் தலைவா்அ. சிதம்பரநாதன், எழுத்தாளா் ராம. சுதாகரன் முன்னிலை வகித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவரும், கல்வெட்டு ஆய்வாளருமான சிங்கார உதியன் பயிற்சியளித்தாா். இந்த பயிற்சியில் திருக்கோவிலூா் அங்கவை-சங்கவை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனா். பயிற்சியை சமூக சேவகா்கள் விக்னேஷ், சிவலிங்கம், ஆசிரியா்கள் மா.அல்லி, மு.காமாட்சி, ஜோ. மஞ்சுளா, அ. சூரியா உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.
