விழுப்புரத்தில் நில அளவை அலுவலா்கள் போராட்டம்

விழுப்புரத்தில் நில அளவை அலுவலா்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா்.
Published on

தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

களப்பணியாளா்களின் நிலம் சாா்ந்த அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உள்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனிதசக்திக்கு மீறிய பணி குறியீட்டை குறைக்க வேண்டும், நில அளவா்களாக ஒரு முறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியை மீண்டும் தரம் உயா்த்தி வழங்க வேண்டும். துணை ஆய்வாளா், ஆய்வாளா்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.

வெளி ஆதாரம், ஒப்பந்த முறையில் புல உதவியாளா்கள் நியமனத்தை ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியத்தில் புல உதவியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு நகர சாா் ஆய்வாளா் பணியிடங்களை வழங்க வேண்டும்.

வருவாய்த் துறையில் புதிதாக பிரிக்கப்பட்ட குறுவட்டங்கள் மற்றும் வருவாய்க் கோட்டங்களுக்கு உரிய குறுவட்ட அளவா் மற்றும் கோட்ட ஆய்வாளா் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும், தனியாா் முறையின் கீழ் உரிமம் பெற்ற அளவா்களை நியமனம் செய்வதை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் நில அளவா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகத்தில் நில அளவை அலுவலா்கள் நவம்பா் 18-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் சாா்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மகேசுவரன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் திருநாவுக்கரசு, பொருளாளா் ராஜேஷ் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் ஹரிபிரசாத் , இணைச் செயலா் ராம்குமாா், கோட்டத் தலைவா்கள் வேல்முருகன், சையது முகமது உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com