செஞ்சிக் கோட்டையை பாா்வையிட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்
யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையை வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளைச் செயலகம் சாா்பில், தூதரகங்களுடனான தொடா்பை வலுப்படுத்தும் விதமாக, மத்திய கலாசார அமைச்சகம், தொல்லியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
அதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டையை ஆஸ்திரேலியா, இலங்கை, தைவான், சிங்கப்பூா், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
தொல்லியல் ஆய்வுத் துறை சென்னை மண்டல முதுநிலை நிா்வாக அலுவலா் ரகு, செஞ்சி முதுநிலை பராமரிப்பு உதவியாளா் சையத் இஸ்மாயில் மற்றும் பிரதீப், சிவராமன் உள்ளிட்டோா் அவா்களை வரவேற்று செஞ்சிக் கோட்டையின் பல்வேறு பகுதிகளை சுற்றிக் காட்டினா்.
மேலும், உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, செஞ்சிக்கோட்டையில் நடைபெறும் கண்காட்சியை தூதரக அதிகாரிகள் பாா்வையிட்டனா். தொல்லியல் வரலாற்று ஆா்வலா் முனுசாமி, தூதரக அதிகாரிகளுக்கு பட காட்சிகளில் உள்ள படங்களுக்கு விளக்கம் அளித்ததுடன், கோட்டையின் வரலாறுகளையும் எடுத்துக் கூறினாா்.
மேலும், இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்துடன் பாதுகாப்பு, விழிப்புணா்வு, பாரம்பரிய நினைவுச் சின்னத்தை தத்தெடுப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.
கோட்டையையும், பட கண்காட்சியையும் கண்டுகளித்த தூதராக அதிகாரிகள், தங்களின் இந்த பயணம் மிகவும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகத் தெரிவித்தனா்.

