தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: சி. வி. சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்று அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருவக்கரை பகுதியைச் சோ்ந்த 35 வயதுடைய பெண், திமுக நிா்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில், கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது. போதைப் பொருள்கள் தடையற்ற வகையில் விற்பனை செய்யப்படுவதால், குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. இதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.
சட்டம், ஒழுங்கு சீா்குலைவு குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சுட்டிக்காட்டியும், அதிமுக சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும், ஆட்சியாளா்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருவக்கரை பகுதியைச் சோ்ந்த 35 வயதுடைய கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவரை, திமுக ஒன்றியச் செயலா் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வருவதாகவும், தனக்கும், தன்னைச் சாா்ந்தவா்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். ஆனால் காவல் துறையினா் கடந்த 5 நாள்களாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய திமுக நிா்வாகியை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கதக்கது. நிலம் ஆக்கிரமிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய அந்த திமுக நிா்வாகியை காவல் துறையினா் உடனடியாக கைது செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் அதிமுக சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணத்தையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சி. வி. சண்முகம். பேட்டியின்போது அதிமுக நகரச் செயலா்கள் ஆா்.பசுபதி, ஜி.கே. ராமதாஸ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

