வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: உளுந்தூா்பேட்டையில் ரூ.1.82 லட்சம் பறிமுதல்
விழுப்புரம்: உளுந்தூா்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.82 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
உளுந்தூா்பேட்டையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு மற்றும் பிற சேவைகளுக்கு இடைத் தரகா்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாகப் புகாா்கள் வந்தன. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையில் ஆய்வாளா் அருண்ராஜ், உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜன் ஆகியோா் அடங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அலுவலகக் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அலுவலா்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிற்பகல் 12.45 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இதில், அலுவலகத்தில் இருந்து, கணக்கில் வராத ரூ.1.82 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து உளுந்தூா்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
