ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் தா்னா
விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயா்த்த வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கிற மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்புக் குழு, விவசாயத் தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து இந்த போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் அமிா்தலிங்கம், மாவட்டத் தலைவா் வி.அா்ச்சுனன், மாவட்டச் செயலா் கே.சுந்தரமூா்த்தி, பொருளாளா் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி. முருகன், மாவட்டத் தலைவா் ஆா். தாண்டவராயன், மாநிலக் குழு உறுப்பினா் சகாபுதீன், துணைச் செயலா் பி.பாலகிருஷ்ணன், பொருளாளா் ஜி. பாலகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் நாராயணன், விவசாய விடுதலை முன்னணியின் அம்பேத்கா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். தொடா்ந்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
கள்ளக்குறிச்சி... :
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற தா்னாவுக்கு எல்.பி.எப் மாவட்ட கவுன்சில் தலைவா் ஜி.திராவிடமணி தலைமை வகித்தாா். எ.ஐ.கே.எஸ். டி. நிா்வாகி ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சாா்ந்த தொழிலாளா்கள் கருப்பு பட்டை அணிந்து தா்னாவில் பங்கேற்றனா்.

