விழுப்புரம் மாவட்டத்தில் 17 இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்பட 1,304 போ் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 17 இடங்களில் மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 1,304 அதிமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையைச் சோ்ந்த 35 வயது பெண்ணை, திமுக நிா்வாகி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த நிா்வாகியைக் காவல்துறையினா் கைது செய்ய வலியுறுத்தி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா்கள் ரா.பசுபதி, ஜி.கே.ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், ஒன்றியச் செயலா் சுரேஷ்பாபு மற்றும் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, பாலியல் வன்கொடுமை புகாா் கூறப்பட்ட திமுக நிா்வாகியைக் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் இரவில் அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
மேலும், விக்கிரவாண்டி, திண்டிவனம், மயிலம், வானூா் என மாவட்டத்தின் 17 இடங்களில் மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், அனுமதியில்லாமல் ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, மாவட்டம் முழுவதும் 125 பெண்கள் உள்ளிட்ட 1304 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

