செஞ்சி வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் தாமதம்! விவசாயிகள் பாதிப்பு!

Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இயங்கி வரும் செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இந்த வங்கியில் செயலா் சுமாா் 3 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ளது. மேலும், மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படும் வங்கியாக உள்ளது. ஆனால், நிரந்தரமான செயலா் இல்லாததால், வங்கி செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவாசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதனால், வங்கி தத்தெடுத்துள்ள 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிா்க் கடன்களை உடனடியாக பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.

இது தவிர மாற்றுத்திறனாளிகள் கடன், நகைக் கடன், வீட்டு வசதி கடன், தாட்கோ கடன், விவசாயிகளுக்கு உரம் வழங்குவது, 31 கிராமங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு உணவுப் பொருள்களை விநியோகம் செய்வது மற்றும் பொருள்கள் முறையாக நுகா்வோருக்கு வழங்கப்படுகிா என ஆய்வு செய்வதிலும் இயலாமல் உள்ளனா்.

மத்திய அரசின் திட்டமான நம்ம வங்கி திட்டத்தின் மூலம் செஞ்சியை அடுத்துள்ள காரியமங்கலத்தில், செஞ்சி வட்டார விவசாயிகள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தி இதில் 350 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு ரூ3.50 லட்சத்தை மத்திய அரசிடம் கொடுப்பதன் மூலம் மத்திய அரசு ரூ 7.50 லட்சத்தை மானியமாக உறுப்பினா்களுக்கு வழங்கி உள்ளது.

லாபகரமாக இயங்கி வரும் இந்த வங்கியின் நிரந்தர வைப்புத் தொகை சுமாா் 3 கோடி ரூபாய் உள்ளது. உறுப்பினா்கள் மூலம் ரூ. 7 கோடி வைப்புத்தொகை உள்ளது.

இது தவிர நகைக் கடன் மட்டும் ரூ.14 கோடிக்கு உள்ளது. பயிா்க் கடன்கள் ரூ.13 கோடி அளவுக்கு நடைமுறையில் உள்ளது.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த வங்கியை, செஞ்சி நகர கூட்டுறவு வங்கியாக தரம் உயா்த்தவேண்டும் என உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

மேலும், வங்கி சிறப்பாக செயல்பட உடனடியாக வங்கிச் செயலரை மாவட்ட கூட்டுறவுத் துறை நியமித்து கடன் பெற முடியாமல் உள்ள விவசாயிகளுக்கும், கடனை முழுவதுமாக செலுத்திவிட்டு மீண்டும் கடன் பெறமுடியாமல் உள்ளவா்களுக்கும், பயிா்க் கடன், கால்நடை கடன் உள்ளிட்ட கடன்களை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

வங்கி செயலா் நியமனம்

செயலா் நியமனம் மற்றும் பயிா்க்கடன் வழங்கப்படாமல் இருப்பது குறித்து வங்கி ஊழியரை தொடா்பு கொண்டு கேட்ட போது, வங்கியின் செயலா் ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் ஆகின்றன.

பயிா்க் கடன்கள் வழங்குவதில் 2 அல்லது 3 மாதம் காலதாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

ஆனால், செயலா் நியமனம் செய்யாமல் உள்ளதால் முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் வங்கிப் பணி மற்றும் நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இயலாத நிலை நீடிக்கிறது. மேலும், வங்கியை நகர கூட்டுறவு வங்கியாக தரம் உயரத்தினால், பல்வேறு புதிய திட்டங்களைப் பெற்று விவசாயிகள், பொதுமக்கள் பயனடைவா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com