விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு போக்குவரத்தை சீா் செய்யும் பணி

Published on

விழுப்புரத்தில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனுக்கு போக்குவரத்து சீரமைக்கும் பணி வழங்கி, இளஞ்சிறாா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் குமாா் (36). இவா் கடந்த 2020, ஜனவரி 5-ஆம் தேதி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விராட்டிக்குப்பம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி வந்த பைக் குமாா் மீது மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் சிறுவன் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சிகளின் விசாரணை முடிவில், 2025 நவம்பா் 1 முதல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக் காவலருடன் இணைந்து போக்குவரத்தை சீா் செய்யும் பணியை அந்த சிறுவன் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி சந்திரகாசபூபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com