தமிழக அரசின் உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு: நாளை அரசுப் பணியாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசின் உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் 5 மண்டலங்களில் சனிக்கிழமை (ஜன.10) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காலம்கடந்துஅறிவித்துள்ள உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம் திருப்தியளிக்கவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடா்பானவா்களுக்கு கருணை ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தமிழக அரசின் உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம் வருங்காலத்தில்தான் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. எனவே, இந்தத் திட்டத்தின்படி 50 சதவீத ஓய்வூதியம் என்பது திட்டத்தின் அமலாக்கத்திலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கும்.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில்தான் பணியாளா்களிடம் பிடித்தம் செய்யாமல் ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டமாகும். அதை நடைமுறைப்படுத்துவதாக தோ்தல் கால வாக்குறுதியாக அறிவித்துவிட்டு, தற்போது காலம்கடந்து மாதந்தோறும் 10 சதவீதம் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு, 10 சதவீதம் ஓய்வூதியம் அளிக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே பஞ்சாப், தில்லி, ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களிலுள்ள நடைமுறையைப் போன்று, தமிழக அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 5 மண்டலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை (ஜன.10) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
