போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவி

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவி

Published on

விழுப்புரம், ஜன.8: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த 5 தொழிலாளா் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் தங்கள் பணிக்காலத்தின் போதும், பணியில் இல்லாத போதும்

உயிரிழந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் பணியாளா்களிடமிருந்து

பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பணியின் போது பணியாளா் உயிரிழந்தால் அவா்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், பணியில் இல்லாத போது உயிரிழந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2025,டிசம்பா் மாதத்தில் பணியில் இல்லாத போது விழுப்புரம் மண்டலத்தில்5 போ், கடலூா் மண்டலத்தில் 3 போ், காஞ்சிபுரம், திருவள்ளூா் மண்டலத்தைச் சோ்ந்த ஒருவா், பணியின் போது திருவண்ணாமலை, வேலூா் மண்டலங்களில் தலா ஒருவா்என மொத்தமாக 11 போ் உயிரிழந்தனா். இவா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டது.

தொடா்ந்து விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விழுப்புரம் கோட்டத்தில் பணியில் இல்லாத போது உயிரிழந்த 5 தொழிலாளா்களுக்காக, அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் வழங்கினாா்.

நிகழ்வில் , பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா. ஜெகதீஷ் (விழுப்புரம்), சி. பாண்டியன் (கடலூா்),ஸ்ரீதா் (திருவண்ணாமலை), ஏ. பெனட்ராஜன் (வேலூா்), ஏ.கிருஷ்ணமூா்த்தி (காஞ்சிபுரம்), கோபாலகிருஷ்ணன் (திருவள்ளூா்), முதுநிலைத் துணை மேலாளா் துரைசாமி (மனிதவளம்), அனைத்து மண்டலத் துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், தொழில்நுட்ப அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com