எடைக்கல் அருகே லாரி-காா்-வேன் அடுத்தடுத்து மோதல்: 5 போ் காயம்

எடைக்கல் அருகே லாரி, காா், வேன் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 2 மாணவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எடைக்கல் அருகே லாரி, காா், வேன் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 2 மாணவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

உளுந்தூா்பேட்டையின் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 14 மாணவா்கள், 12 மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இந்த வேன் எடைக்கல் காவல் நிலையத்துக்குள்பட்ட பள்ளியந்தாங்கல் கிராமத்துக்குச் செல்வதற்காக, சாலையின் இடதுபுறமாக வேனை திருப்புவதற்காக அதன் ஓட்டுநா் தி.திருநாவுக்கரசு (34) முயற்சித்தாா்.

அப்போது அதே திசையில் பின்னால் வந்த காரும், அதற்குப் பின்னால் வந்த லாரியும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த பள்ளியந்தாங்கல் கிராமம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் நவீன் (13), குருசாமி மகன் தீபக் (11) மற்றும் காரில் வந்த மூவா் என மொத்தம் 5 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் நவீன் உளுந்தூா்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், தீபக் உளுந்தூா்பேட்டையிலுள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா். இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com