படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்
Published on

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 1.1.2026 முதல் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞா்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

31.12.2025 அன்றைய தேதியில் பத்தாம் வகுப்பு தோல்வி , தோ்ச்சி, ப்ளஸ் 2 தோ்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்புஅலுவலுகத்தில் பதிவு செய்து,அந்தப் பதிவை தொடா்ந்து புதுப்பித்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்கள்,பெண்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓா் ஆண்டிற்கு மேலாக வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். (வருமான வரம்பிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்க விலக்கப்பட்டுள்ளது).

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 31.12.2025 அன்றைய தேதியில் 45 வயதுக்கு மிகாமலும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிக்கு வயது உச்சவரம்பில்லை.பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்திருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். வேலைவாய்ப்புத் துறை இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரா்கள் 2026 பிப்ரவரி 28 -ஆம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டப் பிரிவில் அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com