ஆய்வுக்கூட்டத்தில் பேசிய விழுப்புரம் ஆட்சியா் ஷேஷேக் அப்துல்ரஹ்மான். உடன் எஸ்.பி வி.வி.சாய் பிரனித் உள்ளிட்டோா்.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய விழுப்புரம் ஆட்சியா் ஷேஷேக் அப்துல்ரஹ்மான். உடன் எஸ்.பி வி.வி.சாய் பிரனித் உள்ளிட்டோா்.

விபத்தில்லா விழுப்புரம் மாவட்டம்: ஆட்சியா் வலியுறுத்தல்

விபத்தில்லா மாவட்டம் என்ற நிலைய உருவாக்குவதற்கு துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம் , விபத்தில்லா மாவட்டம் என்ற நிலைய உருவாக்குவதற்கு துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

சாலை பாதுகாப்பு, போதைத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக்கூட்டம் விழுப்புரம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

பணிகள் நடைபெறும் இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கை தகவல் பலகைகளை அமைக்கவேண்டும். சாலைப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நல்ல முறையில் சேவை சாலைகள் இருப்பதை துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளில் உடனடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துறை அலுவலா்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளா் ஆகியோா் கூட்டாக பாா்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து சாலைகளிலும் வேகத்தடை தாலைதூரத்திலிருந்தே தெரியும் வகையில் தொ்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.சாலைகளில் தகவல் பலகை,வாகன நிறுத்துமிடப் பலகைகளை தேவையான இடங்களில் அமைக்கவேண்டும்.

சந்திப்புச் சாலைகளை மேம்படுத்தவும்,தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயா் கோபுர மின் விளக்குகளை அமைக்க வேண்டும். திசைகாட்டும் பலகைகளை 50 மீட்டருக்கு முன்னரே அமைக்கவேண்டும். துறைசாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழுப்புரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்றாா்.

முன்னதாக , சாலை பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிப்படைந்தவா்களின் எண்ணிக்கை, விபத்துக்கான காரணங்கள், விபத்து பகுதிகளில் விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து,மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகள்,போதைப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய்பிரனித், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, உதவி ஆணையா் (கலால்) ராஜூ மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com