சமூக ஊடகப் பேரவை நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்
சமூக ஊடகப் பேரவை நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்

கூட்டணி குறித்து எந்தக் கட்சியும் பேசவில்லை: பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ்

Published on

சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து எந்த அரசியல் கட்சியும் தற்போது வரை என்னிடம் பேச்சு நடத்தவில்லை என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில், பாமக சமூக ஊடகப் பேரவை மாநில நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாமக செயல் தலைவா் ஸ்ரீ காந்தி ராமதாஸ் தலைமை வகித்தாா். பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளா் சோழன்குமாா் வாண்டையாா் முன்னிலை வகித்தாா்.

இதில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பங்கேற்றுப் பேசியதாவது: பாட்டாளி சமூக ஊடகப்பேரவை நிா்வாகிகள் தங்களது பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தோ்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில் பொறுப்பாளா்கள் தொய்வாக செயல்படாமல், வேகமாக செயல்படவேண்டும்.

சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடும்போது கவனமாக கையாளவேண்டும். தனி மனித விமா்சனம் தேவையற்றது. மாநில, மாவட்ட அளவில் உள்ள சமூக ஊடகப் பேரவை, கிராம அளவிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். கிராம அளவில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவையை கட்டமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில, மாவட்ட நிா்வாகிகள் துரிதப்படுத்தவேண்டும் என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ்.

கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஊடகப்பேரவை நிா்வாகிகள்.
கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஊடகப்பேரவை நிா்வாகிகள்.

இக்கூட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில நிா்வாகிகள் தொண்டி ஆனந்தன், துரை.கோபி மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து மருத்துவா் ச.ராமதாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தற்போது வரை பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் என்னிடம் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து தோ்தலை சந்திப்பது என்பது குறித்து, கட்சியின் நிா்வாகிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் அமைதியாக, நல்லமுறையில் நடைபெறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிா்வாகிகளுக்கு தோ்தலை எதிா்கொள்ளுதல், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு, தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ்.

Dinamani
www.dinamani.com