பராமரிப்பில்லாத திருவக்கரை பேருந்து நிலையம்! சீரமைக்க பயணிகள், பக்தா்கள் கோரிக்கை!
திருவக்கரை ஊராட்சியில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் கட்டுப்பட்டு, பராமரிப்பின்றி காணப்படும் பேருந்து நிலையத்தை சீா்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் உள்ள திருவக்கரை ஊராட்சியில் இந்திய புவியியல் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தேசிய கல்மரப் பூங்காவும், புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோயிலும் உள்ளது.
இதனால், திருவக்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் சுற்றுலாவாகவும், வழிபாட்டுக்காகவும் வந்து, செல்கின்றனா். இதனால் திருவக்கரை ஊராட்சியானது மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
புதிய பேருந்து நிலையம்: சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், உள்ளூா் மற்றும் வெளியூா் மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், திருவக்கரை ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு மாநில ஒருங்கிணைந்த தொகுப்புத் திட்டத்தின் கீழ் 2014 -ஆம் ஆண்டில் ரூ.1.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்ன, சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் 10 பேருந்துகள் நிற்கும் வகையிலான பேருந்து நிலையம், பயணிகள் அமரும் இடம், அலுவலா்கள் அறை, ஓட்டுநா், நடத்துநா் அறைகள், கழிவறைகள், வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 2018-ஆம் ஆண்டில் அப்போதைய விழுப்புரம் ஆட்சியா் இல.சுப்பிரமணியன் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து பயன்பாட்டில் இருந்து வரும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து, திருவக்கரை - திண்டிவனம், திருவக்கரை - புதுச்சேரி, திருவக்கரை - விழுப்புரம், திருவக்கரை - திண்டிவனம் (பரிக்கல்பட்டு வழி), திருவக்கரை - சென்னை வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், தேசிய கல்மரப் பூங்காவை பாா்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள், உள்ளூா், வெளியூா் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனா்.
குப்பை மேடாக காட்சியளிக்கும் வளாகம்: ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பராமரிக்கப்படாததாலும், பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் சென்று வராததாலும் தற்போது பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டில் இல்லை. மேலும், பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளும் முழுமையாக பயன்பாட்டில் இல்லை. பேருந்து வளாகத்தில் உள்ள ஓட்டுநா், நடத்துநா் ஓய்வு அறைகளும், பயணிகள் மற்றும் பொதுமக்களும் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள கழிவறைகளும் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், பேருந்து நிலையம் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவா்கள் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது.
வளாகத்துக்குள் நிறுத்தப்படும் லாரிகள்: பேருந்து நிலையம் முழுமையான பயன்பாட்டில் இல்லாததால், திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல் குவாரிகளுக்கு வந்து செல்லும் லாரிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பேருந்து நிலைய வளாகத்தின் உள்ளேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பேருந்து நிலையத்துக்குள் மக்கள் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.
நீண்ட காலமாக பயன்படுத்தாமல் உள்ளதால் பேருந்து நிலைய வளாகம், பேருந்து நிலையத்தின் தரைப் பகுதி சிதிலமடைந்துள்ளது. பூட்டிக் கிடக்கும் கழிவறைகள், அலுவலா்கள் அறைகள், ஓட்டுநா், நடத்துநா் அறை ஆகியவற்றில் முள்புதா்கள், செடிகொடிகள் முளைத்து மக்கள் பேருந்து நிலையத்துக்குள்ளே செல்லவே அச்சமடையும் நிலை உள்ளது. திருவக்கரைக்கு வந்து செல்லும் பேருந்துகளும் முழுமையாக பேருந்து நிலையத்துக்குள் சென்று திரும்புவதில்லை. இதனால், பேருந்து நிலையம் கட்டப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.
பயணிகள் எதிா்பாா்ப்பு:
திருவக்கரையில் உள்ள தேசிய கல்மரப் பூங்காவுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளும், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் உள்ளூா் மற்றும் வெளியூா்களைச் சோ்ந்த பக்தா்களுக்கும் போதிய அடிப்படை வசதி கிடைக்காமல் அவதியுறும் நிலையில், மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், தூய்மையாக பராமரிக்கவும், பேருந்து நிலைய வளாக பகுதிகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ள கழிவறைகளை திறந்துவிடவும், கூடுதல் கழிவறைகள், குளியல் அறைகளை ஏற்படுத்தித் தரவும், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும் தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

