கூட்டணி அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம்! - மருத்துவா் ராமதாஸ்
கூட்டணி அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமை வகித்தாா். செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி உள்ளிட்ட 20 உறுப்பினா்கள் பங்கேற்றனா். சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஆா்.அருள், வைத்தியலிங்கம் ஆகிய இருவா் மட்டும் பங்கேற்கவில்லை. பின்னா், செய்தியாளா்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும். இது சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி என்று மக்கள் பேசுகிற அளவுக்கு கூட்டணி அமைக்கப்படும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். கூட்டணி குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.
தில்லி உயா் நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்த கருத்தின்படியும், நீதிமன்றத் தீா்ப்பின்படியும் அன்புமணி பாமக தலைவா் என்று சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது.
பாமகவின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூடாது என்று செயற்குழு, பொதுக்குழு, நிா்வாகக் குழுவில் சொல்லிய பிறகும், அன்புமணி தன்னை பாமகவின் தலைவா் என்று சொல்லி வருகிறாா். இது, நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும், அவா் பாமகவின் சின்னம், கொடி, பெயா் ஆகியவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
பாமகவின் தலைவா் என அன்புமணி கூறுவதை ஊடகங்கள் அப்படியே வெளியிடுகின்றன. இது எனக்கு வருத்தமாக உள்ளது என்றாா் ராமதாஸ்.
த.வெ.க.வுடன் கூட்டணியா?: இதைத் தொடா்ந்து, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துகிறீா்களா என்ற கேள்விக்கு, நாங்கள் சொல்வதைதான் சரியானது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்றவா்கள் கூறுவதை நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்த ராமதாஸ், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், எப்படியாவது வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். இதுகுறித்து மக்கள்தான் தீா்மானிப்பாா்கள் என்றாா்.

