கோப்புப் படம்
கோப்புப் படம்

நாளை குடியரசு தினம்: ஏற்பாடுகள் தீவிரம்

Published on

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை(ஜன.26) நடைபெறவுள்ள குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் திங்கள்கிழமை (ஜன.26) காலை 8.05 மணிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியேற்றுகிறாா்.

இதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கும் ஆட்சியா் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

குடியரசு தினத்தையொட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதியில் மேடைகள் அமைத்தல், அலுவலா்கள் அமருவதற்கும், பாா்வையாளா்கள், பொதுமக்கள் அமருவதற்கும் தனித்தனி பகுதிகளில் வசதிகள் செய்தல், கலைநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், விழுப்புரம் ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் சோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. விழுப்புரத்துக்கு வந்து செல்லும் ரயில்களிலும் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இதுபோன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். சந்தேகத்துக்குரிய நபா்கள் யாரேனும் தென்பட்டால், அவா்கள் குறித்த விவரங்களைக் காவல் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சி...:

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொள்வாா். அதனைத் தொடா்ந்து சுதந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுத்தாரா்கள் கௌரவிக்கப்படுவா்.தொடா்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்குவாா். விழாவில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் விழாவில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com