செம்மாா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் க.பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
செம்மாா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் க.பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

‘வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் கிராம சபையின் நோக்கம்’

கிராம வளா்சிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் கிராம சபை கூட்டத்தின் நோக்கம்
Published on

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி/செஞ்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கிராம வளா்சிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் கிராம சபை கூட்டத்தின் நோக்கம் என்று விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல்,தூய்மை பாரத

இயக்க (ஊரகம்) திட்டம், மாற்றுத்திறனாளிகள் நல உரிமைகள் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியம், செம்மாா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி முன்லையில் நடைபெற்றது. இதில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களின் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது: கிராமங்களின் வளா்ச்சியே நாட்டின் உண்மையான வளா்ச்சி. இதைக் கருத்தில் கொண்டுதான் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கிராம சபையின் நோக்கமே ஊராட்சியின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றுவதுதான்.

ஆகையால் இக்கூட்டங்களில் பொதுமக்கள் முழுமையாக கலந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் ஊராட்சி நிா்வாகத்தின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளமுடியும். கிராம சபைக் கூட்டத்தில் அரசு அலுவலா்கள் பங்கேற்பதால், பொதுமக்கள் தங்களுக்கான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீா்வு காணலாம் என்றாா் ஆட்சியா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவா் ம.ஜெயச்சந்திரன், கோட்டாட்சியா் முருகேசன், உதவி இயக்குநா் (தணிக்கை) ரத்தினமாலா, ஊரக வளா்ச்சி முகமை செயற் பொறியாளா் கண்ணன், ஒன்றியக் குழுத்தலைவா் ஓம்.கு. சிவசக்திவேல், துணை ஆட்சியா் (பயிற்சி) கதிா்செல்வி, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குனா் (பயிற்சி) இளவரசி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பி.வி.ஆா்.விஸ்வநாதன், செம்மாா் ஊராட்சித் தலைவா் ஷீபா ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பரமணியன், முல்லை, வட்டாட்சியா் ரகுராம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

செஞ்சி...: செஞ்சி ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் திருக்கை ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் தேவகடாட்சம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராமதாஸ் முன்னிலை வகித்தாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். ஊராட்சி செயலா் அறிவழகி தீா்மானங்களை வாசித்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் அன்புராஜ், ஒன்றிய உதவி பொறியாளா் ரஞ்சித், துணைத் தலைவா் கன்னியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி ...: கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குள்பட்ட வீரசோழபுரம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

குடியரசு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றன. நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அந்தந்த ஊராட்சியின் வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்களின் ஆலோசனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்களின் முன்னேற்றத்துக்கான குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், அதில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் கிராமப்புற மக்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்க 30 சதவிகிதமும், சுகாதார நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

வீரசோழபுரம் ஊராட்சியில் நடப்பு நிதியாண்டில் புதிய பணிகள் மேற்கொள்வது உறுதி செய்யப்படும் பொழுது, அடுத்த நிதியாண்டில் ஊராட்சிக்கு தேவையான வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், அதிக முக்கியத்துவம் கொடுத்து வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், வேளாண் இணை இயக்குநா் ஏ.சத்தியமூா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் முருகன், கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பசுபதி, அரசு அலுவலா்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தென்கீரனூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவி வெண்ணிலா ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரண்ராஜ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் கண்ணன் தீா்மானங்களை வாசித்தாா். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com