வராக நதிக்குள் கொட்டப்படும் உணவகக் கழிவுகள்: விவசாயிகள் புகாா்!
விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதிகளிலுள்ள உணவகங்களின் கழிவுகள் வராக நதிக்குள் கொட்டப்படுவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன், துணை இயக்குநா் சுரேஷ், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி, உதவி ஆட்சியா்(பயிற்சி) ரா. வெங்கேடசுவரன், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் மு.நாகராஜகுமாா் உள்ளிட்ட பல் துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துகளின் விவரம் வருமாறு:
2024, டிசம்பா் மாதத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலருக்கு இன்னமும் நிவாரணத் தொகை வரவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி ஏரி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்த ஏரியின் மதகுகள் உள்ளிட்டவை உடைந்து சேதமடைந்துள்ளன. இதை சீரமைக்கக் கோரி தொடா்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சின்னநெற்குணம் ஏரியின் நடுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை உடனடியாக அகற்றவேண்டும். விக்கிரவாண்டி ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பணியைப் பாதியிலே விட்டுவிட்டு அலுவலா்கள் வந்துவிட்டனா். மீதமுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி எப்போது மேற்கொள்ளப்படும்.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதிகளிலுள்ள உணவகங்களின் கழிவுகள் வராக நதிக்குள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் நீா்மாசுபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. வராக நதிக்குள் கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் வடிகால் வசதி சரியான முறையில் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த பணியை முறையாக செய்யாததால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 தொகை வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக இந்த தொகை பெறப்படுகிறது என்பதை விவசாயிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். கிளியனூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு கடன் தொகை வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. கடன் வழங்க முடியவில்லை எனில் சங்கத்திலுள்ள உறுப்பினா்களுக்கான பங்குத்தொகையை வழங்கவேண்டும்.
காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். விக்கிரவாண்டியில் கட்டப்பட்டுள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்து பேசினா். அப்போது அவா்கள் கூறியது:
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளது. மின்னணுப் பணப்பரிமாற்ற முறையில் நிவாரணத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தொகை செலுத்தப்படும் போது, ஏற்கெனவே அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்றவராக இருந்தால், அவருக்கு தொகை செல்வதில் சிக்கல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட விவசாயிகள் புதிய வங்கிக் கணக்கு அல்லது அஞ்சல் கணக்கைத் தொடங்கி, அந்த எண்ணை அளித்தால் தொகை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகலாம்பூண்டி ஏரி, சின்னநெற்குணம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் உலகலாம்பூண்டி ஏரியில் மதகுகள் சீரமைக்கும்பணிக்கான நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும். விக்கிரவாண்டி ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி விரைந்து மேற்கொள்ளப்படும். வராக நதிதியில் கழிவுகளைக் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை உடனடியாக வழங்கப்படும் என்றனா் அலுவலா்கள்.

