என்எல்சிக்கு 600 ஏக்கர் கொடுத்த ஜம்புலிங்க முதலியாருக்கு வெண்கலச் சிலை

என்எல்சி நிறுவனம் உருவாக கருவியாக இருந்த ஜம்புலிங்க முதலியாருக்கு  நெய்வேலி நகரில் இரட்டைப் பாலத்தில் முழுவுருவச் சிலை அமைக்கப்பட்டு, அதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் திங்கள்கிழமை

என்எல்சி நிறுவனம் உருவாக கருவியாக இருந்த ஜம்புலிங்க முதலியாருக்கு  நெய்வேலி நகரில் இரட்டைப் பாலத்தில் முழுவுருவச் சிலை அமைக்கப்பட்டு, அதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

அன்றைய தென்னாற்காடு ஜில்லா கடலூர்- பண்ருட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருகண்டேஸ்வரம் கிராமத்தில் 1890-ல் பிறந்த ஜம்புலிங்க முதலியார், பெரும் நிலக்கிழாராக திகழ்ந்தவர். இவர் கடலூர் நகர்மன்றத் தலைவராகவும், தென்னார்காடு ஜில்லா வாரிய உறுப்பினராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் 30 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். இவரது சிறப்புமிக்க பணிகளைப் பாராட்டி அப்போதைய ஆங்கில அரசு ஜம்புலிங்க முதலியாருக்கு ராவ்பகதூர் என்ற பட்டத்தையும் வழங்கி கெüரவித்தது.

1934-ம் ஆண்டு தனக்குச் சொந்தமான நிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கருப்பு நிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வருவதைக் கண்டறிந்தார். பின்னர் அதை அப்போதைய ஆங்கில அரசின் நிலயியல் துறைக்கு அனுப்பிவைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் முதலியாரின் நிலத்தடியில் பழுப்பு நிலக்கரி இருப்பதை உறுதி செய்தனர்.

முதலியார் தொலைநோக்குடன் செயல்பட்டு, தன்னலமில்லாத அப்போதைய சென்னை மாகாண முதல்வர் காமராஜரிடம் இத்தகவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, காமராஜர் தனக்கிருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி நேருவுடன் ஆலோசித்தப் பின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி உருவாக தூண்டுகோலாக அமைந்தது.

இதையடுத்து அப்பகுதியில் சுரங்கம் வெட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் சுரங்கப் பொறியாளர் எச்.கே.கோஷ் என்பவர் ஆய்வுப் பணி மேற்கொண்டு சுரங்கம் தோண்ட யோசனை தெரிவித்தவுடன், முதலியார் தனக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை நிறுவனத்துக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இதைடுத்து நிறுவனம் தொடங்கப்பட்டு, பின்னர் பணிகள் தொடக்கப்பட்டன. அதுதான் இன்றைய என்எல்சி. இன்று பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கை அளித்துக் கொண்டிருக்கும் என்எல்சி, தமிழகம் மட்டுமின்றி இதர தென்மாநிலங்களுக்கும் ஒளி வழங்கிவருகிறது.

அத்தகைய காரணகர்த்தாவான ஜம்புலிங்க முதலியாருக்கு முதலில் 2-ம் சுரங்க வாயிலில் சிலை அமைக்கப்பட்டது.

ஆனால் அவை போதிய பராமரிப்பின்றி சிதைந்து போனதையடுத்து, பொதுமக்கள் அதிகம் புழங்கும் நெய்வேலி நகரினுள் இரட்டைப் பாலத்தின் மீது முழுவுருவ வெண்கல சிலையை நிறுவியது.

அச்சிலையை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன், இயக்குநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜம்புலிங்க முதலியாரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

வேலைவாய்ப்பு கிட்டுமா? முதலியார் குடும்பத்தினர் எதிர்பார்ப்பு:இந்த சிலை திறப்பு விழாவுக்கு, ஜம்புலிங்க முதலியார் குடும்பத்தைச் சேர்ந்த பேரன் பேத்தி மற்றும் கொள்ளுப் பேரன்கள் வரவழைக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டனர்.

ஜம்புலிங்க முதலியாரின் மகள் வழி பேரனான அமரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் பேசுகையில் "நாங்கள் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நல்ல நிலையில் படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை.

நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பேரன் அமரன், பேத்தி ரஞ்சனி மற்றும் கொள்ளுப்பேரன் ஸ்ரீராம் ஆகியோர் தெரிவித்தனர்.

மனுகொடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என்எல்சி தலைவர்:  என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாயிருந்த ஜம்புலிங்க முதலியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமா? என நிறுவனத் தலைவர் பி.சுரேந்திரமோகனிடம் கேட்டபோது, "அவர்கள் மனு கொடுத்தால் பரிசீலித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

தொழிற்சங்கங்கள் நிலைப்பாடு: இது குறித்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜவன்னியன் கூறுகையில், "ஜம்புலிங்க முதலியார் தன்னலம் இல்லாமல் 600 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியது ஒருபுறம் என்றாலும், இந்நிறுவனம் தோன்றி பல ஆயிரம் பேர் வாழ்வில் விளக்கேற்றியது மட்டுமில்லாமல், இன்று தென் மாநிலங்களுக்கே மின்சாரம் வழங்குகிற ஒரு உன்னதமான பணி இங்கு நடைபெறுகிறது என்றால் அதற்கு முதல் பங்களிப்பு அளித்த ஜம்புலிங்க முதலியாரின் குடும்பத்தினருக்கு நிறுவனம் தாமாக முன்வந்து வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com