கடலூர் மாவட்டத்தில் பாயும் 5 ஆறுகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
வங்கக்கடலோரம் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் வழியாக 5 ஆறுகள் பாய்ந்தோடி கடலில் கலக்கின்றன. தற்போது தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ஆறுகள் மூலமாக கடலைச் சேர்கின்றன.
இதனால் மாவட்டம் வழியாகச் செல்லும் ஆறுகளில் அதிகப்படியான வெள்ள நீர் சென்றுகொண்டிருக்கிறது.
குறிப்பாக கடலூர் நகரின் வழியாகச் செல்லும் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாற்றில் அதிகப்படியான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் கெடிலம் ஆற்றில் கலந்து கடலில் கலக்கிறது. தற்போது விழுப்புரத்தில் பெய்து வரும் மழை நீரும் கெடிலத்துக்கு வருவதால் தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. இதனால், ஏற்கெனவே உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலூரில் கடலில் கலக்கும் பெண்ணையாற்றிலும் தற்போது தண்ணீரின் அளவு அதிகமாகச் செல்கிறது. மேற்கண்ட பகுதிகளில் அதிகமான மழை பெய்து வருவதால் பெண்ணையாற்றிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பரவனாறு உப்பனாற்றில் கலந்து கடலூர் முதுநகரில் உள்ள துறைமுகம் அருகே கடலில் கலக்கும். இந்த ஆற்றிலும் தற்போது தண்ணீரின் போக்கு அதிகமாக உள்ளது.
மேலும், மணிமுக்தாறு வெள்ளாற்றில் கலந்து புவனகிரி அருகே கடலில் கலக்கும். இதிலும் நீரின் போக்கு அதிகமாக உள்ளது.
மேலும், கொள்ளிடம் கடலூர்-நாகப்பட்டினம் மாவட்டம் இடையே கடலில் கலப்பதாகும். இந்த ஆற்றிலும் நீரின் போக்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு மாவட்டத்தில் பாயும் 5 ஆறுகளிலும் அதிகமான அளவில் நீர் செல்வதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.