பலவகை மலர் செடிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த வேகாக்கொல்லை விவசாயிகள் தற்போது வீரிய ரக இந்தோனேஷியா சவுக்குக் கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
பண்ருட்டி வட்டத்தில் வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் சத்திரம் கிராமம் உள்ளது. நீர் வளத்துடன் செழிப்பான செம்மண் நிலம் என்பதால் விவசாய பயிர்கள் செழித்து வளரும். வாழை, மணிலா, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
இருப்பினும், இங்குள்ள விவசாயிகள் நர்சரி பண்ணைகள் அமைத்து மல்லி, ரோஜா, கனகாம்பரம், செம்பருத்தி, அரளி போன்ற பூ செடிகள், மிளகாய், தக்காளி போன்ற காய்கறி செடிகள், பலா, மா, தென்னை, சப்போட்டா போன்ற மரக்கன்றுகளும் உற்பத்தி செய்து தமிழகமும் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை நடத்துபவர்கள், இவ்விழாவுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தாம்பூலத்துடன் பூ மற்றும் மரக்கன்றுகளை வழங்க மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது, இந்தோனேஷியா வீரிய ரக சவுக்கு மர நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வேகாக்கொல்லை சாரதாம்பாள் நாற்றங்கால் மைய உரிமையாளர் ஆர்.முத்துக்குமரன் கூறியது.
கடந்த 20 ஆண்டுகளாக பூ செடிகள், பழம் மற்றும் பலன் தரும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வருகிறோம். விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது, இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஜிங்குண்னியா சவுக்குக் கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். ஒரு கன்றின் விலை ரூ.2. சாதாரண சவுக்குக் கன்றுகள் 4-5 ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகும், இந்தோனேஷியா சவுக்கு இரண்டரை ஆண்டுகளில் ஏக்கருக்கு 55 டன் கிடைக்கக் கூடியது. வறட்சியை தாங்கும் சக்தி கொண்டதால் தண்ணீர் அதிகம் தேவை இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.