பிபிடி நெல் பயிருக்கான சாகுபடி மேலாண்மை முறைகள் குறித்து கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் த.தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் பயிர் சாகுபடி தொடங்கியுள்ளது. இதற்காக விவசாயிகள் நாற்றுவிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் பிபிடி ரக நெல் நாற்றும் விடப்பட்டுள்ளது. பிபிடி ரகமானது பல்வேறு பூச்சிகளால் பூஞ்சான நோய்கள் மற்றும் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய் தாக்குதலுக்கு அதிகம் உள்படக் கூடியது.
குறிப்பாக இலைசுருட்டுப் புழு புகையான், தண்டு துளைப்பான் பூஞ்சான நோய்களான இலைப் புள்ளிநோய், இலையுறை அழுகல், நோய் தண்டு அழுகல் நோய், பாக்டீரியாவினால் இலை கருகல் நோய், குலை நோய் ஆகியன அதிகம் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தும்.
வளர்ச்சிப் பருவத்தில் மப்பும் மந்தாரமான சூழ்நிலை, வயலில் அதிக அளவு தண்ணீர் தேக்குதல், தேவைக்கு அதிகமான யூரியாயிடுதலால் பூச்சி மற்றும் நோய் பரவுதலை அதிகரிக்கும்.
எனவே, பிபிடி-க்கு மாற்று சன்ன ரகங்களான ஆடுதுறை-49, கோ (ஆர்)-51 ஆகியவற்றை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாறாக, தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பிபிடி ரகம் சாகுபடி செய்ய நேரிடும் போது கண்டிப்பாக விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
தழைச்சத்து உரங்களை மண் ஆய்வு பரிந்துரை அடிப்படையில் 2 அல்லது 3 தடவை பிரித்து இட வேண்டும். பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு கரைசலை ஒரு லிட்டர் நீரில் 5 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
பூஞ்சானம் மற்றும் பாக்டீரியாவினால் இலைக் கருகல் நோய்களின் தாக்குதலுக்கு தக்க மருந்தினை நட்ட 25-ஆம் நாள் மற்றும் நட்ட 50-ஆம் நாளில் தெளித்தல் வேண்டும்.
எனவே அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை விவசாயிகள் அணுகி பயன்பெற வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் த.தனசேகரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.