சுடச்சுட

    

    அரசு நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
     இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசாணை எண்.540-ன் படி, ஆக்கிரமிப்புகள் குறித்து பெறப்படும் புகார்கள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றி தீர்வு காண கடலூர் மாவட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர், சார்-ஆட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக அளித்து, கணினி மூலம் பதிவு செய்து ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
     அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியானால், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக சட்டத்தின் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
     எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தான விவரம் எழுத்து மூலமாக புகார் மனுதாரருக்கு 60 நாள்களுக்குள் தெரிவிக்கப்படும்.
     இந்த நடைமுறைகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை விசாரணை செய்ய கோட்ட அளவில் கோட்டாட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வட்ட துணை ஆய்வாளர், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ஆகியோர் கொண்ட மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
     இந்தக் குழுவால் 60 நாள்களுக்குள் வட்டாட்சியர் பதில் அளிக்கத் தவறியது பற்றிய புகார்களையும், வட்டாட்சியரால் அளிக்கப்பட்ட பதில் அல்லது நடவடிக்கை திருப்திகரமாக இல்லாத நிலையில், மனுதாரர் தெரிவிக்கும் மேல்முறையீட்டு மனு மீது 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
     கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக் குழுவின் முடிவுகள் மீதான சீராய்வு மனு மீது விசாரணை செய்வதற்காக, மாவட்ட அளவிலான சீராய்வுக் குழு மாவட்ட வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர், நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
     கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக் குழுவிடமிருந்து உரிய காலத்துக்குள் பதில் கிடைக்கப்பெறாத மனுதாரர்கள் மற்றும் தீர்மானம் செய்யப்பட்ட முடிவினை ஆட்சேபம் செய்யும் மனுதாரர்கள் சீராய்வு குழுவுக்கு மனுவாக அளிக்கலாம் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai