நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக சொந்தக் கிராமத்தில் போராட்டம்
By நெய்வேலி, | Published On : 11th May 2017 08:56 AM | Last Updated : 11th May 2017 08:56 AM | அ+அ அ- |

நீதிபதி கர்ணனை கைது செய்யக் கூடாது என வலியுறுத்தி, மங்கலம்பேட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான கர்நத்தம் கிராமத்தில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் புதன்கிழமை இரவு போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி கர்ணன். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தவர், தற்போது, கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
நீதிபதி கர்ணனுக்கும், சக நீதிபதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். இந்த நிலையில், நீதிபதி கர்ணனிடம் மனநல பரிசோதனை நடத்தும்படி அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கர்ணன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் கர்ணனை கைது செய்ய உத்தரவிட்டது.
இத்தகவல் அறிந்த நீதிபதி கர்ணனின் சொந்த கிராமமான கர்நத்தத்தில், அனைவரின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றினர். பின்னர், நீதிபதி கர்ணனின் தம்பி வழக்குரைஞர் அறிவுடையநம்பி தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே கூடி கையில் கருப்புக் கொடி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதிபதி கர்ணனை கைது செய்யக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.