மனு அளித்தவரை தாக்கியதாக நகராட்சி அதிகாரி மீது புகார்

கடலூர் நகராட்சியில் மனு அளித்தவரை இளநிலை பொறியாளர் தாக்கியதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

கடலூர் நகராட்சியில் மனு அளித்தவரை இளநிலை பொறியாளர் தாக்கியதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நா.ரபீன் (46) என்பவர் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனு: எனது தாயார் அமிர்தம் (55), கடலூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியபோது கடந்த 2005-ஆம் ஆண்டில் இறந்தார். எனவே, வாரிசு அடிப்படையில்  வேலைக்கேட்டு மனு அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் கடலூர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதில் 2012-ஆம் ஆண்டில் தீர்ப்பு பெறப்பட்டது. இதுதொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த 30-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் என்னை தாக்கினார். இதில், கீழே விழுந்ததில் படிக்கட்டில் அடிப்பட்டு எனது கால் மற்றும் பற்கள் உடைந்துவிட்டன. எனவே, இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக இளநிலை பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறியதாவது: ஜன.30 ஆம் தேதி பணியிலிருந்த என்னை ரபீன் என்பவர் திடீரென தாக்கினார். அப்போது சக ஊழியர்கள் அவரை பிடித்துக் கொண்டனர். இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தேன். 
அதற்குள் ரபீனின் உறவினர்கள் அவரை அழைத்துச் சென்று விட்டனர். நான் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மனு ரசீது அளித்து விசாரித்து வருகின்றனர். தற்போது, நான் தாக்கியதாக கூறி வருவதில் சில பின்புலங்கள் உள்ளன என்றார்.
இளநிலை பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும் அதிமுக பிரமுகர் வ.கந்தனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், இளநிலை பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலமே மீண்டும் கடலூரில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com