விருத்தாசலத்தில் திடீர் மழை: 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த திடீர் மழையால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
விருத்தாசலத்தில் திடீர் மழை: 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்!
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த திடீர் மழையால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், விழுப்புரம், சேலம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவித்த நெல், கம்பு, மணிலா, மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட உணவு தானியங்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

தற்போது சம்பா பருவம் என்பதால் சராசரியாக தினசரி 20 ஆயிரம் மூட்டைகள் வரை நெல் வரத்து உள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை வரை கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை நடைபெறாததால் கிடங்கினுள்ளும், திறந்தவெளியிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென மழை பெய்தது. இதனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள், கிடங்கினுள் வைத்திருந்த மூட்டைகள் என சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தன. 
அதிகாலையில் மழை பெய்ததாலும், விவசாயிகள் பலர் தங்களது வீடுகளில் இருந்ததாலும் அவற்றை தார்பாய் போட்டு மூட முடியாமல் போனது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகள் போதிய விலைக்கு கொள்முதல் ஆகுமா என்ற ஐயப்பாடு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

எனவே, பல அடுக்கு கிடங்கு கட்டடப் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என ஒழுங்கு முறை விற்பனைக் கூட நிர்வாகத்துக்கு விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்குத் தட்டுப்பாடு 

கடலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவத்துக்கான நெல் அறுவடைப் பணி நடைபெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறந்துள்ளது.

ஆனால், அறுவடை செய்த நெல்லை வாங்குவதற்கு கொள்முதல் நிலையங்களுக்கு போதுமான சாக்குகள் வழங்கப்படாததால் விவசாயிகள் சுமார் 5 நாள்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேவையான சாக்குகளை வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com