கம்பு விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனை

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
Published on
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சிறு தானியப் பயிரான கம்பு அதிக அளவு பயிரிடப்படுகிறது. குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, பொட்டவெளி, ஆடூர் அகரம், ஆடூர் குப்பம், ரெங்கநாதபுரம், கண்ணாடி, விருப்பாச்சி, பெத்தனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, கீழூர், கோ.சத்திரம், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம்.ராசாக்குப்பம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கம்பு பயிரிடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தின் பல  பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையை பயன்படுத்தி, பருவத்துக்கு ஏற்ற நல்ல மகசூல் தரக்கூடிய கம்பு விதை ரகங்களை தனியார் கடைகளில் வாங்கி, விவசாயிகள் தங்களது நிலத்தில் விதைப்பு செய்துள்ளனர். 
ஆனால், விதைப்பு செய்யப்பட்ட கம்பு சரிவர முளைக்கவில்லை. இதனால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டத்தில் சுமார் 2,500 ஹெக்டர் பரப்பளவில் மானாவாரி கம்பு விதைப்பு செய்யப்பட்டது. இதற்காக தனியார் கடைகளில் முன்னணி நிறுவனத்தின் வீரிய ரக கம்பு விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ. 180 கொடுத்து வாங்கி விவசாயிகள் விதைப்பு செய்தனர். சீராக மழை பெய்து, நிலத்தில் சரியான ஈரப்பதத்தில்  விதைக்கப்பட்ட கம்பு விதைகள் சரியாக முளைக்கவில்லை. இதனால், விவசாயிகள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளனர்.
விவசாயிளுக்கு வழங்கப்படும் விதைகள், இடுபொருள்கள் தரமற்ற வகையில் இருப்பதால், பல்வேறு இன்னல்களுக்கு விவசாயிகள் ஆளாகின்றனர்.
எனவே, மண்டல விதை உதவி இயக்குநர், மாவட்ட விதை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் குறிப்பிட்ட கம்பு விதை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com