கத்தரிக்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 01st April 2019 08:03 AM | Last Updated : 01st April 2019 08:03 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பண்ருட்டி வட்டாரத்தில் கள்ளிப்பட்டு, திராசு, மாளிகைமேடு, சூரக்குப்பம், கட்டமுத்துப்பாளையம், அக்கடவல்லி, குச்சிப்பாளையம், பகண்டை, சித்திரைச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டை, பாகல், கொத்தவரை, முள்ளங்கி, மிளகாய், முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நிகழ் பருவத்தில் கத்தரி விளைச்சல் நன்றாக உள்ளபோதும், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து சரவணப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா கூறியதாவது:
கார்த்திகை மாதம் கடைசி வாரத்தில் கத்தரி நடவு செய்தோம். செடிகள் வளர்ந்து தற்போது விளைச்சல் நன்றாக உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30 வரை விலைபோனது. ஆனால், கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். 10 நாள்களுக்கு ஒரு முறை செடிகளுக்கு மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது.
செடிகள் பராமரிப்பு, பறிப்புக் கூலி, வாகனச் செலவு, ஏற்றி, இறக்க ஆள்கூலி ஆகியவற்றை கணக்கிட்டால் இந்த விலைக்கு கடும் நஷ்டம் ஏற்படும். இதனால் கத்தரிக்காய்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளோம் என்று கூறினார்.