பண்ருட்டியில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிப்பு!
By DIN | Published On : 01st April 2019 08:01 AM | Last Updated : 01st April 2019 08:01 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.
பண்ருட்டி, சத்தியமூர்த்தி வீதியில் பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவன அலுவலகம் உள்ளது. பண்ருட்டி வியாபார நகரம் என்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி, செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவை வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
பண்ருட்டி நகரில் கடந்த 2 வாரங்களாக பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், வியாபாரம் தொடர்பான மின்னஞ்சல், பணம் பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் கடலூர் மாவட்டச் செயலர் சி.ராஜேந்திரன் கூறியதாவது: பண்ருட்டி நகரில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைய சேவை கடந்த 10 நாள்களுக்கும் மேலாக செயல்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்புப் பணி நடைபெறுவதாகக் கூறுகின்றனர். ஆனால், அதற்கான எந்த முன்னறிவிப்பையும் வழங்கவில்லை. புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் பதில் இல்லை.
தற்போது மக்களவைத் தேர்தல் காலம் என்பதால் வியாபாரம் தொடர்பாக ரொக்கப் பணத்தை கையில் கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால், இணைய வழி பணப் பரிவர்த்தனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இங்கு இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதந்தோறும் பொருள் மற்றும் சேவை வரி கணக்கை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும். அந்தக் கணக்கையும் தற்போது தாக்கல் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், பிஎஸ்என்எல் அதிகாரிகள் பழுதை சரிசெய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களை ஊக்குவிப்பதாக உள்ளது. இணைய இணைப்பை விரைந்து சீரமைக்கவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், நியூ ஜெனரேசன் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 150 முதல் 200 இணைப்புகள் மட்டுமே ஜம்பர் போடமுடியும். அடுத்த இரண்டொரு நாள்களில் இந்தப் பிரச்னையை சரிசெய்துவிடுவோம் என்றார்.