வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி: 9 இடங்களில் நடைபெற்றது
By DIN | Published On : 01st April 2019 08:02 AM | Last Updated : 01st April 2019 08:02 AM | அ+அ அ- |

வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கடலூர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளும் அடங்கியுள்ளன. மக்களவை தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிக்கு மாவட்டம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் 790 பேர் பங்கேற்கவில்லை. எனவே, அவர்களுக்கு விளக்கம் கேட்டு துறை ரீதியாக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், பெரும்பாலானவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, விடுபட்டவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி, 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில், முதல்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், கடலூர் மக்களவைத் தொகுதியில் கூடுதலாக ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் இந்தத் தொகுதிகளில் பணியாற்ற கூடுதல் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டனர்.
கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மண்டல பயிற்சியாளர்கள் அன்பரசன், கேசவன், பாக்கியநாதன், சிவா ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர்.
வட்டாட்சியர் செல்வகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜி.ராஜேஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சியில், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அறிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள், கையாள வேண்டிய பொருள்கள், கள்ள வாக்கு அளிப்போரை என்ன செய்வது, வாக்குப் பதிவு நாளில் செய்யக் கூடாதவை, வாக்குப் பதிவுக்குப் பின்னர் பெட்டிகளை எப்படி சீல் வைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.