திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாது: ச.ராமதாஸ்
By DIN | Published On : 01st April 2019 08:05 AM | Last Updated : 01st April 2019 08:05 AM | அ+அ அ- |

திமுகவால் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்
ச.ராமதாஸ் கூறினார்.
அதிமுக கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமிக்கு ஆதரவாக கடலூர் முதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு
சேகரிப்புக் கூட்டத்தில் மருத்துவர்
ச.ராமதாஸ் பேசியதாவது:
அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் 8 கட்சிகள் போட்டியிடுகின்றன. இவை தவிர, சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளும், 450 அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
ஆனால், திமுக கூட்டணிக்கு அப்படி எந்த அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை. திமுகவால் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. 1973-ஆம் ஆண்டில் திண்டுக்கல் தொகுதியில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலராக அறிவித்தது கடலூரில்தான். அதிமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு தொகுதிகளிலும் பாமக போட்டியிடுவதே வெற்றிக்கான அறிகுறியாகும்.
தமிழகத்தில் உள்ள 5.95 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம். அவர்கள் இந்தத் தேர்தலில் திமுகவுக்கு பெரும் தோல்வியை அளிப்பர். கடந்த 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்கள் முகம் சுளிக்கும்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பெண்களுக்கு கட்டணமில்லா கட்டாயக் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதே பாமகவின் கொள்கை. அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். கடலூர் துறைமுகத்தை தூர்வாருதல், சென்னையிலிருந்து கடலூருக்கு புதுச்சேரி வழியாக ரயில் தடம் அமைத்தல், மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் ச.ராமதாஸ்.
நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் சொரத்தூர் இரா.ராஜேந்திரன், ஆர்.குமரன், ஜி.ஜெ.குமார், தங்கமணி, காசிநாதன், பாமக நிர்வாகிகள் பழ.தாமரைக்கண்ணன், சண்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெய்வேலி: தொடர்ந்து நெய்வேலி இந்திரா நகரில் ச.ராமதாஸ் பேசியதாவது: மத்திய அமைச்சரவையில் பாமக 10 ஆண்டுகள் அங்கம் வகித்தது. அப்போது
மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணியிடம், குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்றேன். அதன் பேரில்தான் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டன.
தாய்மொழி தமிழை ஆட்சி மொழியாக்க 14 மொழிகளில் அழைப்பிதழ் அச்சிட்டு மாநாடு நடத்தினோம். அழைப்பிதழை பார்த்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆச்சரியமடைந்தார். 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக எதுவும் செய்யவில்லை. மாறாக பணம் கொழிக்கும் துறைகளை
கேட்டு பெற்றது. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவோம் என்றார் ராமதாஸ்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் சொரத்தூர் ரா.ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், சிவக்கொழுந்து, குறிஞ்சிப்பாடி அதிமுக ஒன்றிய செயலர் ஆர்.கோவிந்தராஜ், பாமக முன்னாள் மாவட்ட செயலர் கோ.ஜெகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.