தனி நபர் மூலம் வாக்காளர் சீட்டு விநியோகம்: வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 17th April 2019 06:40 AM | Last Updated : 17th April 2019 06:40 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தனி நபர்கள் மூலம் வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) விநியோகித்தது தொடர்பாக வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் மூவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர் சீட்டை வீடு, வீடாகச் சென்று வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட நெய்வேலி ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் 3 வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்தப் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி வாக்காளர் சீட்டு விநியோகிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வாக்குச் சீட்டுகளை தாங்களே விநியோகிக்காமல் தனி நபர்களிடம் கொடுத்து விநியோகித்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் நெய்வேலி வட்டம்-3 பகுதியைச் சேர்ந்த எஸ்.செளந்தரராஜன், வட்டம் 5-இல் வசிக்கும் என்.ரங்கராஜலு, வட்டம் 9-இல் வசிக்கும் ஜி.ராமலிங்கம் மற்றும் ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்த விஜயகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது திங்கள்கிழமை வடக்குத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...