தேர்தல் விதிமீறல்: 61 வழக்குகள் பதிவு
By DIN | Published On : 17th April 2019 06:39 AM | Last Updated : 17th April 2019 06:39 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக மாவட்டத்தில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், 2 வழக்குகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பதற்றமானவையாக மொத்தம் 167 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்புப் பணியில் மொத்தம் 4,059 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில், 2,878 பேர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 1,181 பேர் முன்னாள் காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆவர்.
மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் 5 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அதிரடிப்படை வாகனத்தில் சுமார் 15 முதல் 20 காவலர்கள் வரை இருப்பார்கள். இவர்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்லும் வகையில் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...