ஆற்றில் குளித்த போது முதலை இழுத்துச் சென்ற தொழிலாளி சடலமாக மீட்பு
By DIN | Published On : 26th April 2019 06:40 AM | Last Updated : 26th April 2019 06:40 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட தொழிலாளி வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி (45). விவசாய கூலித் தொழிலாளி. இவர் புதன்கிழமை மாலை தனது மனைவி முத்துலட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஜெயமணியை முதலை கடித்து இழுத்துச் சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த பிச்சாவரம் வனக் காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், சிதம்பரம் வனக் காப்பாளர்கள் கஜேந்திரன், சிவக்குமார், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் அண்ணாமலை நகர் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்தனர். முதலை பிடிக்கும் நந்திமங்கலம் ராஜு குழுவினரின் உதவியுடன் படகு மூலம் இரவு முழுவதும் ஆற்றில் ஜெயமணியை தேடினர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஆற்றிலிருந்து ஜெயமணியின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.