கடலூர் அருகே குடிநீர்த் தட்டுப்பாடு: ஆட்சியரிடம் புகார்
By DIN | Published On : 26th April 2019 06:36 AM | Last Updated : 26th April 2019 06:36 AM | அ+அ அ- |

கடலூர் அருகே குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பொது நலப்
பேரவைத் தலைவர் எஸ்.என்.கே.ரவி, மாவட்ட ஆட்சியருக்கு புதன்கிழமை அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் ஊராட்சி ஒன்றியம், குண்டுஉப்பலவாடி ஊராட்சிக்கு உள்பட்டது கண்டக்காடு கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதிக்கு கடந்த ஒரு வாரமாகக் குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.
குடிநீர் மேலேற்றும் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பழுது ஏற்பட்டதால், தண்ணீரை தொட்டியின் மேல் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ், இந்தக் கிராமம் இணைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது தண்ணீர்க் கிடைக்கவில்லை.
இந்தக் கிராமம் கடலோரக் கிராமம் என்பதால், ஆழ்துளைக் கிணறுகளை 22 அடி ஆழம் வரை மட்டுமே பதிக்க முடியும். அதுவும் தற்போது மிகவும் கலங்கலான தண்ணீராக வருவதால், குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே, பழுதான மின் மோட்டாரை உடனடியாகச் சரி செய்து பொதுமக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.