தொழிலாளி மர்மச் சாவு
By DIN | Published On : 26th April 2019 06:35 AM | Last Updated : 26th April 2019 06:35 AM | அ+அ அ- |

தொழிலாளி மர்மச் சாவு குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடலூர் அருகே உள்ள வளையமாதேவியைச் சேர்ந்தவர் ரா.டேனியல் (90). இவரது மகன் நற்கருணைநாதன் (48). வண்ணம் பூசும் கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி செல்வியுடன் கடலூர் புதுநகர் சொரக்கால்பட்டில் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருத நோய் காரணமாக செல்வி இறந்துவிடவே, அவரது மகன் தனது தாத்தா டேனியல் வீட்டில் வளர்ந்து வந்தார். இதனால், நற்கருணைநாதன் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். எனினும், செல்விக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காததாலேயே அவர் இறந்துவிட்டதாக கருதும் செல்வியின் உறவினர்கள் அடிக்கடி நற்கருணைநாதனுடன் சண்டையிடுவது வழக்கமாம்.
இந்த நிலையில், புதன்கிழமை டேனியலை தொடர்புகொண்ட செல்வியின் உறவினர்கள், நற்கருணைநாதன் அவரது வீட்டில் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தெரிவித்தனர். இதனடிப்படையில் அவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் நற்கருணைநாதனின் அழுகிய உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து டேனியல் வியாழக்கிழமை கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.