படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்த  கோடை உழவு அவசியம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

கோடை உழவு செய்து படைப்புழுக்களின் தாக்கத்தை விவசாயிகள் கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குநர் சி.அண்ணாதுரை தெரிவித்தார். 

கோடை உழவு செய்து படைப்புழுக்களின் தாக்கத்தை விவசாயிகள் கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குநர் சி.அண்ணாதுரை தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 21,666 ஹெக்டேர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் படைப்புழு தாக்குதலால் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது. இந்தப் புழுக்களின் கூட்டுப் பருவம் தாக்கப்பட்ட வயல்களின் மண்ணுக்கடியிலும், முட்டைப் பருவம் வயல்களிலும் காணப்படும். 
மேலும், இந்தப் புழுக்களின் தாக்கம் களைச் செடிகளின் இலைகள், தண்டுகளிலும் காணப்படுவதால் அவற்றை அழிப்பது முக்கியப் பணியாக உள்ளது. கோடை உழவு செய்யும்போது படைப் புழுவின் தாக்குதல் பெருமளவில் குறைக்கப்படுகிறது.
தற்போது, மாவட்டத்தில் மங்களூர், நல்லூர், விருத்தாசலம், கம்மாபுரம் ஆகிய வட்டாரங்களில் மானாவாரி பயிராக 22 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மக்காசோளப் பயிர்கள் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டு பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது. 
இந்தப் புழுவானது பயிர்களின் இலைகளை கடித்து உண்பதால் பயிர்களின் உணவு தயாரிப்பு பாதிக்கப்படுகிறது. இதன் தாய் அந்துப் பூச்சி முட்டைகளை குவியலாக இடும். ஒரு குவியலில் 100 முதல் 200 முட்டைகள் வரை இருக்கும். ஒரு அந்துப்பூச்சி 1,500 முல் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் 6 நிலைகளை கடந்து பின் கூட்டுப்புழு பருவத்தை அடையும். இவை பெரும்பாலும் மண்ணில் 2 முதல் 8 செ.மீ. ஆழத்தில் கூட்டுப் புழுவாக மாறும். கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை அழித்து விடலாம். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்பகுதியில் உள்ள கூட்டுப் புழுவானது வெளியில் கொண்டுவரப்பட்டு அதிக வெயில் காரணமாக இறப்பதோடு, பறவைகளுக்கும் இரையாகிவிடும். 
மேலும், கோடை உழவு செய்வதால் மண்ணரிப்பு தடுக்கப்படுவதோடு, நன்மை செய்யும் உயிரினங்களின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன. கோடை மழை பெய்யும்போது தண்ணீரை வழிந்தோடச் செய்யாமல் மண்ணுக்குள் சேமித்து வைக்கவும் கோடை உழவு கைகொடுக்கும். 
எனவே, விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக கோடை உழவு மேற்கொள்ள வேண்டும் என அதில் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com