ரூ.52.60 கோடி கரும்பு நிலுவை தொகையை வழங்க திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 26th April 2019 06:38 AM | Last Updated : 26th April 2019 06:38 AM | அ+அ அ- |

கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.52.60 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேத்தியாதோப்பில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை நிர்வாகம் கடந்த 4 ஆண்டுகளாக (2014 முதல் 2017 அரைவைப் பருவங்கள்) கரும்பு விவசாயிகளிடமிருந்து வாங்கிய கரும்புக்கான பணத்தை வழங்கவில்லை.
மாநில அரசு பரிந்துரை விலையான ரூ.27.16 கோடி, லாபத்தில் பங்கீட்டு தொகையான ரூ.5.14 கோடியை நிலுவையாக வைத்துள்ளது.
மேலும் 2018-19-ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.20.30 கோடியாக உள்ளது.
ஆக, தமிழக அரசு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ.52.60 கோடியாக உள்ளது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு கரும்பு பயிரிட அவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
எனவே, தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு கரும்பு கிரய நிலுவைத் தொகையை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.