சபரிமலை விவகாரம்: இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:50 AM | Last Updated : 04th January 2019 08:50 AM | அ+அ அ- |

சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக கடலூரில் பாஜக, இந்து அமைப்பினர் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து, கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே பாஜக தலைமையில் இந்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் தாமரைமணிகண்டன், மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், ஆஜிவன் கமிட்டி கோட்ட பொறுப்பாளர் மு.சக்திகணபதி, கமிட்டியின் பெருங்கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். கோட்ட பொறுப்பாளர் ஜெ.சுகுமாறன், மாவட்ட துணைத் தலைவர் இரா.குணா, நகர தலைவர் கோ.பாபுராஜ், நிர்வாகிகள் பொன்னிரவி, வெங்கடேசன், எஸ்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக கேரள மாநில அரசை கண்டித்து, கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சியினர் (தமிழகம்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில இளைஞரணி செயலர் என்.ஆர்.பரணிதரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். மாநில செயலர் சுவாமிநாதன், மாவட்டத் தலைவர் மு.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.