பயிர்க் காப்பீடு செய்வதற்கு விதைப்புச் சான்று போதுமானது
By DIN | Published On : 04th January 2019 08:49 AM | Last Updated : 04th January 2019 08:49 AM | அ+அ அ- |

விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு விதைப்புச் சான்று போதுமானதென மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடலூர் மாவட்டத்தில் ரபி பருவத்தில் உளுந்து, மணிலா, மக்காச்சோளம், கம்பு, எள், பருத்தி ஆகிய பயிர்கள் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டமானது, இயற்கை சீற்றத்தால் எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு மகசூல் இழப்பீட்டின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மிகவும் உதவிகரமாக உள்ளது.
இதில் உளுந்து, பச்சைப் பயிர், மக்காச்சோளம், கம்பு, மணிலா மற்றும் எள் ஆகிய பயிர்களை காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.
நவரை பருவ நெல் பயிர் காப்பீடு செய்ய பிப்ரவரி 15-ஆம் தேதி கடைசி நாளாகும். பருத்தி பயிர் காப்பீடு செய்ய பிப்.28-ஆம் தேதி கடைசி நாளாகும். பொதுவாக பயிர்க் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் வருவாய்த் துறை அடங்கல் சான்றுக்குப் பதிலாக உதவி வேளாண்மை அலுவலர் வழங்கும் விதைப்புச் சான்றிதழ் போதுமானது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பயிர்க் காப்பீடு செய்ய சில நாள்களே உள்ள சூழ்நிலையில் இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி விதைப்புச் சான்று பெற்று உடனடியாக பயிர்க் காப்பீடு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிர் காப்பீட்டுத் தொகையாக விவசாயிகள் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.405, உளுந்துக்கு ரூ.215, மக்காச்சோளத்துக்கு ரூ.255, கம்புக்கு ரூ.80, மணிலாவுக்கு ரூ.339, எள்ளுக்கு ரூ.102 மற்றும் பருத்திக்கு ரூ.965 செலுத்தினால் போதுமானது.
விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், உதவி வேளாண்மை அலுவலர் வழங்கும் விதைப்புச் சான்றிதழ், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பயிர் காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, விவசாயிகள் அனைவரும் உடனடியாக பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஆட்சியர் அதில் தெரிவித்
துள்ளார்.