வையங்குடியில் குடிநீர் பிரச்னை: காலிக் குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:44 AM | Last Updated : 04th January 2019 08:44 AM | அ+அ அ- |

வையங்குடியில் நிலவும் குடிநீர் பிரச்னையைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி அருகே உள்ளது வையங்குடி கிராமம். இங்குள்ள காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக காலனி பகுதியில் முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி வெலிங்டன் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தினர் கிராம மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முன் பொதுமக்களுடன் வியாழக்கிழமை கூடினர். காலிக் குடங்களுடன் குவிந்த அவர்கள், கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும், கிராம மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, சிலர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஆவினங்குடி காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக போலீஸார் கூறினர்.
இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.