காவல் துறையினர் தலைக் கவசம் அணிவது கட்டாயம்: எஸ்பி
By DIN | Published On : 07th January 2019 08:52 AM | Last Updated : 07th January 2019 08:52 AM | அ+அ அ- |

காவல் துறையினர் இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட எஸ்பி ப.சரவணன் கூறினார்.
காவல் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை காவலர்களுக்கான விபத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து பயிற்சியை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
காவலர்கள் சாலை விதிமுறைகளை சரியாகப் பயன்படுத்தி, முதலில் தங்களுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் தலைக் கவசம் அணிந்துசெல்ல வேண்டும். காவல் வாகன ஓட்டுநர்கள் முதலில் சாலை விதிமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் மனவேதனை அடையும்படி வாகனத்தை ஓட்டக் கூடாது என்றார் எஸ்பி.
மேலும், சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகை, போக்குவரத்து சம்பந்தமான அறிவிப்புப் பலகைகள், சாலைத் தடுப்புகள், விழிப்புணர்வு பலகை ஆகியவற்றில் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் இருந்தால் உடனடியாக அதை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பயிற்சி முகாமில், எலும்பு முறிவுக்கு அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சை தொடர்பாக மருத்துவர் தம்பையா விளக்கினார். பண்ருட்டி வட்டார ஆய்வாளர் வேங்கடகிருஷ்ணன் போக்குவரத்து விதிகள் குறித்தும், கல்லூரிப் பேராசிரியர் சுரேஷ்குமார் சாலை, அதன் பயன்பாடுகள் பற்றியும், விபத்து சம்பந்தமான விடியோ, புகைப்படங்களை திரையிட்டும் விளக்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இரா.வேதரத்தினம், துணைக் கண்காணிப்பாளர் சாந்தி, போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.