வீராணம் ஏரியிலிருந்து கடைமடை பகுதி பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் திறக்கப்படுமா ?

கடலூர் மாவட்ட காவிரி பாசன கடைமடை பகுதிகளில் போதிய நீரின்றி பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், வீராணம் ஏரியிலிருந்து தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்ட காவிரி பாசன கடைமடை பகுதிகளில் போதிய நீரின்றி பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், வீராணம் ஏரியிலிருந்து தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய வட்டங்களில் உள்ள சாகுபடி நிலங்கள் அனைத்தும் கீழணை மற்றும் வீராணம் ஏரி மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. கீழணை மூலம் கடலூர் மாவட்டத்தில் வடவாறு பாசன வாய்க்கால், வீராணம் ஏரி, வடக்கு ராஜன் வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை, விநாயகன்தெரு வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக சுமார் ஒரு லட்சத்து 6,000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன நீர் விநியோகிக்க வேண்டும். 
 காவிரி டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு சாகுபடிக்கு ஆக. 9-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து 13-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இதையடுத்து செப். 3-ஆம் தேதி கீழணை மற்றும் வீராணம் ஏரி ஆகியவை திறக்கப்பட்டன. ஆனால் பாசிமுத்தான் ஓடை, கான்சாகிப் வாய்க்கால் பகுதிகளுக்கு அக்.15-ஆம் தேதி வாக்கில் தண்ணீர் வழங்கப்பட்டது. 
 சம்பா சாகுபடி வழக்கமாக செப்டம்பர் மாதம் தொடங்குவதால் விவசாயிகள் அந்த மாதம் அனைத்து பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரியிருந்தனர். 
பெரும்பாலான விவசாயிகள் காலத்தின் அருமை கருதி நேரடி நெல் விதைப்பு செய்தனர். கடைமடை விவசாயிகள் வழக்கமாக விதைத்து, நாற்று பறித்து நடவு செய்வது வழக்கம். ஆனால், கீழ்அனுவம்பட்டு, மேல்அனுவம்பட்டு, கீழ்மூங்கிலடி, தில்லைநாயகபுரம், கோவிலாம்பூண்டி, மீதிகுடி, சிதம்பரநாதன்பேட்டை, பள்ளிப்படை ஆகிய கிராமங்களில் உள்ள 3,900 ஏக்கர் விளைநிலங்களுக்கு வீராணம் ஏரியிலிருந்தும், கான்சாகிப் வாய்க்கால் பாசனத்தில் நக்கரவந்தன்குடி, தில்லைவிடங்கன், கீழச்சாவடி, மேலச்சாவடி, பின்னத்தூர், ராதாவிளாகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 8,444 ஏக்கர் விளை நிலங்களுக்கும் வடக்கு ராஜன் வாய்க்காலிலும் போதிய தண்ணீரை பொதுப்பணித் துறையினர் முறையாக வழங்கவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.  
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன் தெரிவித்ததாவது: 
மேட்டூர் அணை திறக்கப்பட்டும் தண்ணீர் விநியோகம் முறையாக இல்லாததால், கடைமடை பாசனப் பகுதிகளில் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், முழுமையாக பயிர் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. 
பாசிமுத்தான் ஓடைப் பாசனம், கான்சாகிப் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் ஒருபோக நெல் சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே விவசாயிகள் குடும்பம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். 
ஊடுபயிர் சாகுபடியால் வறுமையின் பிடியிலிருந்து சற்று தப்பிய விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாக உளுந்து சாகுபடி முற்றிலும் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். 
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.50 அடி என்ற நிலையில் தற்போது முழு கொள்ளளவில்  தண்ணீர் தேக்கி வைத்துள்ள பொதுப் பணித் துறையினர், சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்காமல் ஏரியை மூடி வைத்துள்ளனர். பாசன நீர் விநியோகத்தில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அக்கறை இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. 
கடைமடை விவசாயிகள் பாசனத் தேவைக்கு தண்ணீர் கேட்டால், முன்மடை பாசன விவசாயிகள் அறுவடை முடித்து உளுந்து சாகுபடி செய்துள்ளார்கள் எனவும், இந்த சூழலில் வாய்க்காலில் தண்ணீர் திறந்தால் உளுந்து பயிர் வீணாகிவிடும் எனவும் தவறான தகவலை கூறி தப்பிக்க முயல்கின்றனர். 
வாய்க்கால்களை முறையாக தூர்வாரி பலப்படுத்தாமல் பெயரளவுக்கு மட்டுமே பணியை மேற்கொண்டால் கரைகள் பலவீனமாகத்தான் இருக்கும். இதனால் தலைப்பு மதகுகளில் தண்ணீர் திறந்தும் கடைமடை பகுதிகளுக்கு விநியோகிக்க முடிவதில்லை.
இதுபோன்ற காரணங்களால் சூள்கட்டும் பருவத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால், பயிர்களில் பால் பிடிக்காமல் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கடலூர் மாவட்ட ஆட்சியர்  கடைமடை பகுதி விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக போதிய தண்ணீரை பாசிமுத்தான் ஓடை பாசனப் பகுதிக்கும் , கான்சாகிப் வாய்க்கால் பாசனப் பகுதிக்கும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com