பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 03rd July 2019 08:38 AM | Last Updated : 03rd July 2019 08:38 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கடலூரில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு, மாவட்ட உதவிச் செயலர் எஸ்.பழனி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்யூ மாவட்டச் செயலர் கே.டி.சம்பந்தம் உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.
இந்திய தொலைத்தொடர்பு சந்தை முழுவதையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக பிஎஸ்என்எல் நிர்வாகத்தைச் சீரழிப்பதைக் கண்டிப்பது, தொலைதொடர்பு கட்டணம் உயராமல் பாதுகாத்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட அரசு நிதி உதவி செய்ய வேண்டும், 3 மாத நிலுவை ஊதியத்தை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.விஜய் ஆனந்த், பிஎஸ்என்எல்யூ மாவட்ட நிர்வாகிகள் ஆர்.செல்வம், என்.சுந்தரம், பி.கிருஷ்ணன், ஆர்.வி.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், அரகண்டநல்லூர் பகுதிகளைச் சார்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள், பிஎஸ்என்எல் ஊழியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.